விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் காசோலைகளை வழங்கி வைத்த பிரதமர்
[2026-08-23 11:22:20] Views:[29]
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் காசோலைகள் வழங்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் மற்றும் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.
இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் (68), வவுனியாப் பல்கலைக்கழகம் (07) மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் (01) ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தமாக 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.










