yarlathirady.com

யாழ் மக்களே அவதானம்..! நாளை வரை நீடிக்கும் அபாயம்..!

[2026-10-18 16:23:27] Views:[40]

நாட்டின் ஆறு மாகாணங்கள் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை திங்கட்கிழமை அதிகாலை 01.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.