‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
[2026-06-18 22:37:08] Views:[29]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டது. அதன்படி தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் போது நடந்த துயரச் சம்பவமும் கவனத்தை ஈர்த்தது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்பு பணிகள் சில நாட்கள் நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.










