அரசு மரியாதையுடன் விடைபெற்ற இசை அரசி எஸ். ஜானகி!
[2026-07-13 22:14:32] Views:[75]
இந்திய திரையிசை உலகில் அழியாத தடம் பதித்த பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிய குரலால் கவர்ந்த அவர் மறைவு, இந்திய இசை உலகையே பாரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
'ஜானகியம்மா', 'கான கோகிலா', 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்', 'இசை அரசி' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ். ஜானகி அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.
எஸ். ஜானகியின் உடல் மைசூருவிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள், இசைக் கலைஞர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தியதுடன், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. மேலும், காவல்துறையினர் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இறுதி அஞ்சலி செலுத்தினர்.










