யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
[2026-07-14 21:55:06] Views:[44]
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தொடருந்து சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு தொடருந்து நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, நாளை (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த தொடருந்து சேவையை நிறுத்துவதற்கு தொடருந்து நிர்வாகம் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு தொடருந்து பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தன.
விடயங்களை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர கடுகதி தொடருந்து நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தொடருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.










