யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் தொடர்பான தகவல்
[2026-07-15 15:24:38] Views:[50]
யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்றைய தினம் பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சுற்றுநிருபத்திற்கு அமைவாக திட்டமிடல், சுற்றுலா, உணவு பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி ஆகிய உப குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைவாக கல்வி உபகுழுவின் தலைவராக ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி உபகுழுவின் முதலாவது கூட்டம் இது எனவும் தெரிவித்தார்.
மேலும், அண்மையில் வெளியாகிய க.பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டம் முதன்மை பெற்றிருப்பதாகவும், அதற்காக உழைத்த அனைவருக்கும் அரசாங்க அதிபர் என்ற ரீதியில் நன்றிகளையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.










