பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்..!!
[2026-07-16 15:37:31] Views:[51]
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பொலிஸ் வாகன அணிவகுப்பு மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லோயர் தீர் மாவட்டத்தின் ஹைதர் பகுதியில் உள்ள 'லாடம் டாப்' அருகே பொலிஸ் வாகன அணிவகுப்பு சென்றுகொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் 3 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி தற்போது பாதுகாப்புப் படையினரால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றுமொரு சம்பவத்தில், பன்னு மாவட்டத்தில் உள்ள மிரியன் பொலிஸ் நிலையத்தைத் தகர்க்க முயன்ற பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றின் மூலம் பயங்கரவாதிகள் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து மோத முயன்றனர். எனினும், அங்கிருந்த பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் துரிதமாகச் செயல்பட்டு, அந்த வாகனம் பொலிஸ் நிலைய எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நடுவழியிலேயே வெடிக்கச் செய்து அழித்துள்ளனர்.
காரை வெடிக்கச் செய்த பின்னர், பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 4 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாங்க அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.










