இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய கப்பல் போக்குவரத்து...!!
[2025-03-23 09:41:57] Views:[104] தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, 1914ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965ஆம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ராமேஸ்வரம் கடற்பகுதியில் நான்கு இடங்களை தெரிவு செய்து தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இதன் முதற்கட்ட பணியாக நகர்வு மேடை அமைக்கும் பணி ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது.மேலும், இந்த நகர்வு மேடைக்கான பாகங்கள் இரண்டு வாரத்திற்குள் பொறுத்தப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை அருகே பயணிகள் இறங்குதளம் அமைய உள்ள பகுதியில் நிறுவப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கரையிலிருந்து கடலுக்குள் கொங்கிரீட் தூண்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.