பிறந்தநாளை கொண்டாடும் நடிப்பு அரக்கன் கமலஹாசன்.
[2025-11-08 12:11:46] Views:[142]
நடிப்பு அரக்கனான கமல்ஹாசன் தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாள் பகிர்வாக கமல்ஹாசன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே...
நடிகர்கள் பெண் வேடமிட்டு திரையில் தோன்றுவது அவ்வப்போது நிகழக்கூடியதுதான். அவையெல்லாம் ஒரு சில காட்சிகள்தான் இருக்கும். ஆனால், கமல்ஹாசன்தான், படம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்தார்.
காலையில் ஆறு மணிக்கு எழுந்திருப்பார். உடற்பயிற்சி செய்வதற்கு எப்போதும் தவறுவதே இல்லை. காலை உணவு இட்லி, தோசை சாப்பிடுவார். பிரட் டோஸ்ட், ஆஃபாயில், முட்டை, காபி, டீ, சாப்பிடுவதில்லை.
கேரளாவின் சிவப்பு அரிசி சாதத்தை விரும்பி சாப்பிடுவார். நான்-வெஜ்ஜில் கமலுக்கு மிகவும் பிடித்தது மீன். அதுவும் கேரளாவில் கிடைக்கும் மீன் என்றால், ரொம்பவே இஷ்டம்.
எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைத்து இருக்கிறார் ‘குறும்புக்காரா...’ என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்துக் கொண்டாராம்.
கமலுக்கு திரைப்படங்களைப் பார்ப்பதை விட அதீத ஆர்வம் புத்தகங்களை வாசிப்பதில் உண்டு. இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு வருவார். அதேபோல் திரைப்படத்துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.
ரஜினியும் நானும் கிளாஸ்மெட் மாதிரி. இன்னும் சொல்லப் போனால், ஒரே பெஞ்ச்மெட் கே.பாலசந்தர் என்கிற பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற பாசம் எங்களிடையே உண்டு. எனினும், கபில்தேவ், இம்ரான்கான் மாதிரி ஆரோக்கியமான போட்டியும் உண்டு’ என்று கூறுவர்.
சினிமாவில் பல நல்ல திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்த பெருமை அவருக்குண்டு.
கமல் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினி என மூன்று பேருமே தேசிய விருது பெற்றவர்கள்.
கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படங்கள் ‘சட்டம் என் கையில்’, ‘அபூர்வ சகோதர்கள்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட். மெட்ராஸ் பாஷையை பேசும் விதத்தை நடிகர் லூஸ் மோகனிடம் கேட்டு அறிந்துகொண்டாராம். மெட்ராஸ் பாஷையைப் பேசி நடிப்பதென்றால், இருவருமே திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல் நடிப்பார்கள்.
கமலின் தந்தைக்கும் கமலுக்கும் உள்ள உறவு, தேர்ந்த இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பைப் போன்றதாகவே இருந்தது. இருவரும் பரஸ்பரம் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும், கமலின் உள்ளுணர்களை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டு பேசுவார்.
பலத்திறமைகளைக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!!










