இசைப்புயலும், நடனப் புயலும் ஓன்று சேரும் MOONWALK
[2025-11-22 12:28:34] Views:[136]
'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில், 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் 'மூன் வாக் ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஸ்டோர்ம்..' எனும் பாடல் வெளியாகி இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீ தரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மூன் வாக்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு ,அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சுஷ்மிதா நாயக், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், டொக்டர் சந்தோஷ் ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அனூப் வி. சைலஜா ஒழிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல் 'ஏ .ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இசைக்கும் , நடனத்திற்கும் முக்கியத்துவம் அளித்து தயாராகும் இந்த திரைப்படத்தை பிஹைன்வுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு நிமிடத்திற்கும் குறைவான 'ஸ்டோர்ம்' எனும் பாடலும், பாடலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதி, பாடியிருக்கிறார். மேலத்தேய தாள லயத்தில் இசை புயல் ரஹ்மானின் வசீகரமான மெட்டில் றாப் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இணையத்தில் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.










