கனடாவில் நடந்தது என்ன?
ஈழத்தமிழர் அடையாளத்தை தவறாக பயன்படுத்தும் புலம்பெயர் அமைப்புகள்..!
[2024-08-28 15:59:19] Views:[344]
கனடாவில் நடைபெற்ற தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் இசை நிகழ்ச்சி குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த வன்முறை கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. கனடாவில் தமிழ் மக்களின் பிரதான "Tamil Fest" எனும் தமிழர் தெருவிழாவுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் அமைப்பான கனேடிய தமிழர் பேரவையே இவ்விழாவினை ஒழுங்கு செய்திருந்தது. எனவே கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என கனடாவிலுள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களை கோரியிருந்தனர்.
இந்த நிலையிலேயே இந்த எதிர்ப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குள்ளே ஒற்றுமையில்லை என்பது இதனூடாக வெளிப்படுகிறது. இது புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் செயல் அல்லவா?
பொதுவாகவே புலம்பெயர் அமைப்புகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்துவது இல்லை. இவர்கள் அமைப்புகளையும் தனிநபர்களையும் முன்னிறுத்தியே சண்டைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்புலம்பெயர் அமைப்புக்கள் பெரும்பாலும் தங்களின் சுயநலத்திற்காக தங்களை தமிழின ஆர்வலர்களாக காட்டிக்கொள்ள இவ்வாறு அர்த்தமற்ற செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இவர்களின் போராட்டங்களின் காரணமாக ஈழத்தமிழர்களாகிய எம்மக்கள் அடைந்துக்கொண்ட நன்மைகள் என்ன? அடைந்துக்கொண்ட தீர்வுகள் என்ன? யாராவது கூறுங்கள்..! சிந்தித்தால் ஒன்றுமே இருக்காது.
இவை முற்றிலும் மக்களை ஏமாற்றுவதற்கான செயற்பாடே ஆகும். இப்புலம்பெயர் அமைப்புக்கள் பெரும்பாலும் தங்களின் சுயநலத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவுமே இயங்கிவருகின்றன. இவ்வாறான விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதனூடாக பெருந்தொகையான பணம் ஈட்டப்படுகின்றது.
ஆனால் அவை யாருக்கு கிடைக்கின்றது என்பதுதான் இதுவரை தெரியவில்லை. இந்த போராட்ட சம்பவம் கூட தங்களுக்கு பணம் கிடைக்காத காரணத்தால் புலம்பெயர் அமைப்பொன்று தனிப்பட்ட கோபத்தினை வெளிப்படுத்தும் நோக்கிலே முன்னெடுத்ததாக கூறப்படுகின்றது.
ஈழத்தமிழர் பேரைச்சொல்லி பணம் சம்பாதிக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரையில் அதனை எமது தாயக மக்களுக்கு வழங்கியுள்ளார்களா? அல்லது தாயகத்திற்காக உழைத்த போராளிகளுக்காக ஏதாவது செய்துள்ளனரா? எதுவுமில்லை.
ஈழத்தமிழர் எனும் அடையாளத்தை பயன்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் அங்கே நன்றாக பணம் சம்பாதித்துக் கொண்டும் தமிழீழம், தாயகம் எனபொய்யாக தங்களை தமிழ் உணர்வாளர்களாக காட்டிக்கொண்டும் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் சரி புலம்பெயர் அமைப்புக்களும் சரி ஈழத்தமிழரின் கண்ணீர் கலந்த உணர்வுகளை வைத்து வியாபாரம் செய்யும் போலி விம்பங்களே..!