தமிழ் பொது வேட்பாளர் சித்தாந்தமும் சிதறி போயிருக்கும் தமிழ் தேசியமும்..!!
[2024-09-09 14:45:38] Views:[222] தற்காலத்திற்கு பொருத்தமற்ற நகர்வாகவே தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் தோன்றுகிறது. தமிழ் தேசிய உணர்வை வெளிகாட்டுவதற்காகவே பொது வேட்பாளர் தெரிவு எனக் கூறப்பட்ட போதிலும் குறிப்பிட்ட இலக்கை அடைவதில் இவர்களின் சித்தாந்தம் தோற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.
தாயகத்தில் பிரதான கட்சிகளின் பிளவுகளானது தமிழர் தரப்பில் எதிர்கால அரசியலையே கேள்விக்குறியாக்கியுள்ளது. எவ்வாறெனினும் இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவது என்பது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தாலும் தமிழர் உரிமைகளை வென்றெடுப்போம் என்று பொது வேட்பாளரை இவர்களே தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இந்த வேட்பாளர் தெரிவுக்கு பொருத்தமான ஒரு ஆளுமை மிக்க ஒருவரை தெரிவு செய்ய தமிழ் கட்சிகள் தவறிவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு கட்சிகள் ,ஒவ்வொரு கோட்பாடுகள், ஒவ்வொரு கொள்கைகள் என தாயகம் சிதற தொடங்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தாயகத்தின் இந்த பிளவுக்கு இந்தியாவின் மறைமுக நகர்வுகளும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் கைப்பிள்ளைகளான எமது தமிழ் அரசியல் தலைமைகளும் அதற்கேற்றவகையில் வழக்கம்போல செயற்பட தொடங்கிவிட்டனர்.
அதேபோன்று பொதுவேட்பாளர் விவகாரத்தில் புலம்பெயர் சக்திகளின் புலம்பெயர் அமைப்புகளின் வழிநடத்தல்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் தகவல் வெளிவந்த நிலையில் மேலும் சில தலைவர்கள் சர்வதேச அரசியல் தலைமைகளின் ஆலோசனைகளை கேட்டு இங்கு முடிவெடுக்கின்றனர்.அண்மை காலமாக நடைபெறும் ஒரு சில விடயங்கள் அவற்றை உறுதி செய்வதாகவே உள்ளன.
இன்னொரு முக்கியமான விடயம் தமிழ் பொது வேட்பாளர் கருத்தியல் மலையக தமிழ் சமூகத்தை கவனத்தில் கொள்ளவில்லை என மலையக சமூக ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடகிழக்கு மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இலங்கையில் தமிழர்கள் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு காட்டுவதற்காகவே பொது வேட்பாளர் கருத்தியலை முன்வைத்தனர். ஆனால் வடகிழக்கை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தாயக தமிழ் மக்களுக்கும் மலையக மக்களுக்குமிடையே ஒரு பிரிவை உண்டாக்கியுள்ளனர்.
அதேபோன்று பொது வேட்பாளரும் வடகிழக்கு தமிழர் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசுகின்றார் ஏனைய பிரதேச தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மறந்தும்கூட வாய் திறக்கவில்லை என்பதே தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
இதனை சுட்டிக்காட்டி மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மலையக அரசியல்வாதிகளும் ஆளுக்கு ஒரு பக்கம் ஆதரவினை வழங்கி ஒருமித்த நிலைப்பாடின்றி செயற்பட்டு வருகின்றனர். வடகிழக்கு அரசியல்வாதிகளும் அவ்வாறே.. இவர்கள் அனைவரது இலக்கு பதவியும் பணமும் மட்டுமே. இவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பற்றிய அக்கறை என்பது சிறிதளவும் கிடையாது. இத்தகைய அரசியல் கள்வர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்லதொரு பாடத்தைப் புகட்டுவதோடு இனிவரும் காலங்களில் இளைய சமுதாயத்தை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும்.அப்போது தான் தமிழ் தேசிய அரசியல் முன்னேற்றம் அடையும்.