புலம்பெயர் அமைப்புகளின் மோதல்களும் தாயக தமிழர் எதிர்காலமும்.!!
[2024-09-12 10:25:22] Views:[307] புலம்பெயர் தமிழ் அமைப்பொன்றின் கிளையில் அண்மைக்காலமாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. குறித்த அமைப்பின் பொறுப்பாளர் யார் என்பதில் உள்ள போட்டித் தன்மையும் நிதியினை பகிர்வதில் உள்ள சிக்கலுமே மோதலுக்கு காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது ஈழ மக்கள் பெயரை வைத்து பணம் சேகரித்து ஈழத்தமிழர்களுக்கான அமைப்புகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இவ்வாறு பதவிக்காகவும் பணத்திற்காகவும் வீதியில் இறங்கி சண்டை பிடித்துக் கொள்வது எந்த அளவிற்கு வெட்கக்கேடான செயல்? இவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகதான் தாயக தமிழர் விவகாரத்தை அங்கு கையாளுகின்றனர்.
உண்மையை சொல்லவேண்டுமெனில் ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்பாலும் நமது ஈழத் தமிழ் மக்களுக்கென உண்மையாகவோ உணர்வு ரீதியாகவோ இயங்கவில்லை. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே இயங்கு கின்றமை இச்சம்பவத்தில் இருந்து தெள்ளத் தெளிவாகின்றது.
எங்கேயோ இருந்து கொண்டு போலியாக பேசிக்கொண்டு போலியாக கண்ணீர் வடித்துக் கொண்டு தாயகம், தமிழீழம், தலைவர் என வெறுமனே உதட்டளவில் பேசி தமிழ் மக்களை தங்கள் வசப்படுத்தலாம் என நினைக்கிறார்கள் போலும். தலைவரின் சிந்தனையை உண்மையில் ஏற்று நடப்பவர்களாக இருப்பின் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பார்களா?
இவ்வாறான செயற்பாடுகளின் மூலமாக ஈழத் தமிழர் அடையாளத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தவறாக பயன்படுத்துவது எமது கண்கூடாகவே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. புலம்பெயர் அமைப்புகளும் சரி எமது தமிழ் அரசியல்வாதிகளும் சரி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. தமிழ் மக்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் தான் இவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. பணம், பதவி மற்றும் சுயநலம் என்பவற்றை நோக்காகக் கொண்டே இவர்கள் செயல்படுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.
இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இவர்களின் சுயரூபத்தை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இவர்களை நம்பி எமது காலத்தை வீணடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இனியும் போலியாக செயற்படும் அரசியல்வாதிகளாகட்டும் அல்லது புலம்பெயர் அமைப்புகளாகட்டும் இவர் எவர் ஒருவருக்குமே நாம் தலை சாய்க்காது நமது உரிமைகளை நாமே வென்றெடுப்போம்.