இனி வரும் தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கையில்..!
[2024-10-03 19:37:40] Views:[390] நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் ஆனால் கடந்த தேர்தல் காலத்தை விட முற்றிலும் மாறுபட்ட அரசியல் களம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. மேலும் தமிழரசியல்வாதிகள் என்னவெல்லாம் நாடகங்கள் காண்பித்து தங்கள் இருப்புகளை தக்கவைத்துக் கொள்ள போகிறார்கள் என்பதே தற்போது உள்ள கேள்வி.
எமது அரசியல்வாதிகளின் தற்போதைய இலக்கு நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே.. இது தொடர்பாக இவர்கள் மக்களின் அபிலாஷைகளை அபிப்பிராயங்களை கேட்பதில்லை.. நாம் என்ன சொன்னாலும் மக்கள் கேட்டுக் கொள்வார்கள் என்ற தைரியத்தில் இவர்கள் ஒவ்வொன்றையும் இதுவரை காலமும் செய்து வருகின்றார்கள். தங்களது சுயநலத்திற்காக மக்களை ஈடுவைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் அரசியல்வாதிகளே எமது தரப்பில் தற்போது உள்ளனர்.
மக்கள் சார்ந்த எவ்வித தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் இவர்கள் எடுப்பதில்லை கட்சிகளுக்கிடையே பிளவு , தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்மை , தலைமை பொறுப்புக்கான குடுமிபிடிச் சண்டை என அற்பத்தனமான அரசியலை செய்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தற்குறிகளை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டுமா? என்ற விரக்தி நிலை தற்போது மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
தென்னிலங்கை அரசியல் மாறிவிட்டது .தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலர் யதார்த்தத்தை புரிந்து தங்களின் வயது முதிர் நிலையை விளங்கிக் கொண்டு தாங்களே அரசியலில் இருந்து விலகிக் கொள்ள முன்வந்துள்ளனர். இதேபோன்று தாயகம் மற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் மாறவேண்டும். இல்லையென்றால் மக்கள் மாற்றுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
எமது சமுதாயத்தில் நன்கு கல்விக் கற்றுக் குழாமினர் வெளிநாடுகளுக்கு சென்று உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அறிவை எமக்காக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை எமது தமிழ் அரசியல் கள்வர்கள் வழங்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்நிலைமை மாற வேண்டும்.
தற்போது வந்திருக்கும் ஆட்சிமாற்றம் முற்றிலும் மாறானவொன்றாக அமைந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதியின் அணுகுமுறைகள் இனவாதமும் மதவாதமும் இல்லாத அமைதியான ஒரு நாடு , நாம் அனைவரும் சமமானவர்கள். ஒரே தேசத்தின் பிள்ளைகள் என்பதையே அவரது கருத்துக்கள் தெளிவுப்படுத்துகின்றன. இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் சாய்ந்து கொடுக்காத ஒரு தலைமை நாட்டிற்கு கிடைத்துள்ளார். எனவே எமது தமிழ் மக்களுக்கான நல்ல வாய்ப்பு இது. இதனை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இனிவரும் தமிழ் தேசிய அரசியலானது தமிழ் மக்களை முற்றிலும் அறிவுபூர்வமாகவும் அரசியல் முதிர்ச்சியுள்ளதாகவும் சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தக்கூடியதாகவும் ஒரு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க செய்யக்கூடிய வகையிலுமான இளைய சமுதாயத்தினரின் தலைமையில் அமைய வேண்டியதாகும். எமது தமிழ் அரசியல் பயணத்தின் வெற்றிக்கு சிறந்த வழி தற்போதிருக்கும் முதிர் அரசியல்வாதிகளையும் அரசியல் கள்வர்களையும் புறந்தள்ளி இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தலே ஆகும்.. இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்..!