இது மாற்றத்திற்கான தருணம் !!!!
[2024-10-07 11:15:05] Views:[307] கடந்த வாரம் ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்ட விடயம் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர் .சம்பந்தன் கொழும்பு 7 மகா கமசேகர மாவட்டத்தில் வழங்கப்பட்ட எதிர்கட்சித் தலைவருக்கான உத்தியோகப் பூர்வ இல்லத்தை அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை என்பதே ஆகும்.மேலும் 2017 ஆம் ஆண்டு இந்த வீட்டின் பராமரிப்பு பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்களும் வெளிவந்திருந்தன.
மறுபக்கம் மதுபான சாலைகளை நடத்துவதற்கான அனுமதி பத்திரங்களை சில தமிழ் அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதும் ஆகும்.
இவை வெறும் ஊடக செய்திகளாக நாம் கடந்து போக முடியாது. ஏனெனில் இத்தகைய கள்வர்களை தான் நாம் வாக்களித்து நமக்காக குரல் கொடுக்க வேண்டும் என எமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றோம். உண்மையில் நாம் இங்கு ஏமாளிகளாக்கப்பட்டுள்ளோம்.
பொதுச் சொத்துக்களை தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொண்டு எவ்வாறு அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றி வந்திருக்கின்றார்கள் என்று பாருங்கள். இவ்வாறான சலுகைகள் கிடைப்பதால் தான் எமக்காக பேச வேண்டியவர்கள் எமக்காக பேசுவதில்லை போலும். அரசாங்கம் வழங்கிய ஒரு சலுகையை மீண்டும் கையளிக்க தயங்கும் இவர்கள் எமக்கு வரும் எத்தனை அபிவிருத்தி வேலைகளில் தனக்கான இலாபத்தை பார்த்திருப்பார்கள்.
இவை அனைத்துமே மக்களின் வரிப்பணம் மக்களின் பணம் என்று ஒருபோதும் இவர்கள் நினைத்ததில்லை. ஏனெனில் இவர்களுக்கு வேண்டியது அதிசொகுசு வாழ்க்கை மாத்திரமே இங்கு தாயக மக்களின் கண்ணீரோ மலையக மக்களின் கண்ணீரோ இவர்களுக்கு முக்கியமானது கிடையாது.
அது மட்டுமல்ல தாயகப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு ,மரங்கள் வெட்டுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இவர்கள் எவற்றுக்குமே அஞ்சாதவர்களாக அதனை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஆனால் நாடாளுமன்றத்திலும் ஊடக சந்திப்புக்களின் போதும் போலியாக மக்களுக்காக பரிந்து பேசுவது போல் நடித்து மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகின்றனர்.
தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றை உணர வேண்டும்.தமிழ் மக்கள் வாக்களித்து வழங்கிய ஆசனங்கள் நாடாளுமன்றத்திற்கான நுழைவுச்சீட்டு மாத்திரமே ,தவிர நீங்கள் சலுகைகளை பெறுவதற்காகவும் சுகபோகங்களை அனுபவிப்பதற்குமான அனுமதிச்சீட்டு கிடையாது.
இது இவர்களுடைய தவறு மாத்திரமல்ல எம்முடைய தவறும் இருக்கின்றது .இத்தகைய போலிக் கள்வர்களை நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினர் இந்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சிறப்பான வாழ்வு ஒன்றை வாழ வேண்டுமெனில் தற்போதிருக்கும் இப்புல்லருவிகளை தகர்த்தெறிந்து புதிய இளைய சமுகத்தை அரசியலுக்குள் கொண்டுவந்து எமது இலக்குகளையும் உரிமைகளையும் அபிலாசைகளையும் அடைந்துக்கொள்வதே சிறந்ததாகும்.
தென்னிலங்கையில் இருக்கும் வயது முதிர்ந்த அரசியல்வாதிகள் தங்களாக முன்வந்து விலகி இளைஞர்களுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளனர்.இதே போன்றதொரு மாற்றம் எமது வட கிழக்கிலும் மலையகத்திலும் ஏற்படவேண்டும்.