சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
[2025-01-08 11:09:32] Views:[171] சர்ச்சையை ஏற்படுத்திய 2024ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி 2,849 பரீட்சை மத்திய நிலையங்களில், 2024 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டது, அதில் 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசியப்பட்டிருந்தன. இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.