யாழில் பொலிஸ் தடுப்பில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
[2025-01-19 12:30:38] Views:[190] யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை, திருவில் பகுதியை சேர்த்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது: 49) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (18) மாலை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்து இன்று (19) அதிகாலை ஊரணி மருத்துவமனையில் பொலிஸார் அனுமதித்தனர்.
இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.
யாழில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடந்த 2023.11.08 திகதி சந்தேகதின் பேரில் கைது செய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 25 வயதான நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் விளக்கமறியலில் இருந்த போது 2023.11.19 திகதி உயிரிழந்தார்.
அலெக்ஸ் பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியதுடன், நீதி கேட்டு போராடி வருகின்றனர்.