கல்லீரல் பகுதியை தந்தைக்கு தானமாக அளித்த மகள்
[2023-02-22 10:43:35] Views:[412] 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் ஹொட்டல் நடத்தி வரும் திருச்சூரைச் சேர்ந்த பிரதீஷ் (48) என்பவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பிரதீஷிற்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததன் காரணத்தினால் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் அவரது 17 வயது மகள் தேவானந்தா தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க தானமாக வழங்க முடிவு செய்தார். எனினும் அதில் ஒரு சிக்கல் இருந்தது அதாவது இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும். அதன் பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் இதற்காக அனுமதி வேண்டி மனுதாக்கல் செய்ததன் பின்னர் அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி அளித்தது.
நாட்டிலேயே முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்த 17 வயது சிறுமி என்ற பெருமையை அவர் பெற்றார். இதனைத் தொடர்ந்து தேவானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என துடித்த தேவானந்தா, தன் உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக மாற்றி, கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் கொழுப்பு முற்றிலுமாக கரைந்ததால், தேவானந்தா கல்லீரல் தானம் செய்ய தயாரானார். கடந்த 9ஆம் திகதி பிரதீஷ்க்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தந்தை மற்றும் மகள் இருவரும் உடல்நலம் தேறி வருகின்றனர். தேவானந்தாவின் செயலைப் பாராட்டி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.
தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியாக இருப்பதாகவும் பிரதீஷ் தெரிவித்துள்ளார்.