பதவி வேட்கையில் தமிழ் அரசியல் தலைமைகள் இடையில் பனிப்போர்! தமிழ் மக்களின் அபிலாசைகள்?
[2023-11-01 11:11:58] Views:[317] இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் கட்சி ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இலங்கை அரசியலையே பரபரப்பாகியுள்ளது எனலாம். இது பதவிக்கான வேட்கையில் ஏற்பட்டுள்ள உட்பூசல் என்றே பலராலும் பேசப்படுகின்றன.
குறித்த தமிழ் அரசியல் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பதவி துறக்க வேண்டும் என அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது உண்மையில் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் அக்கறையில் கூறப்படவில்லை என்றும், கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தன் கைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற குறிப்பிட்ட உறுப்பினரின் சதித்திட்டமே என்றும் கூறப்படுகின்றது.
இத்தனை காலமும் தலைமைத்துவத்தைப் பற்றி வாய் திறக்காது இருந்தவர்கள் இப்போது திடீரென இவ்விடயத்தில் கரிசனை கொள்வது எதற்காக? பதவிக்காக மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது.
எமது தமிழ் மக்களுக்காக ஒருமித்து நிற்க வேண்டிய தற்கால சூழ்நிலையில் இவ்வாறு பதவிக்காக குடுமிச்சண்டை போட்டுக் கொண்டிருப்பது இவர்களின் சுயரூபத்தை மக்களுக்கு நன்கு எடுத்துக்காட்டுகிறது.
இவ்வளவு காலமும் மக்களுக்காக எந்த ஒரு விடயத்தையும் செய்யாதவர்கள், எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தராத இவர்கள், இனி தலைமைத்துவம் மாறினால் மட்டும் என்ன செய்யப் போகிறார்கள்? எமது மக்கள் இதனை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவர்கள் மக்களைப்பற்றி சிந்திப்பது இல்லை அவர்கள் சிந்திப்பதெல்லாம் தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கங்களை மட்டுமே. இவர்கள் மக்களுக்காக பேசுவதற்கோ சிந்திப்பதற்கோ நேரம் ஒதுக்குவதில்லை. இவர்களின் அரசியல் சுயலாபம், அரசியல் அபிலாசைகள் மற்றும் பதவி ஆசை என்பவற்றைப் பற்றியே சிந்திக்கின்றனர்.
இன்று வட கிழக்கில் உள்ள எமது தமிழ் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. தினந்தோறும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதை தாண்டி தீர்வை பெற வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இப்போது பதவிக்காக இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருவது அவர்களின் சுயரூபத்தையே நன்கு காட்டுகின்றது.
இருக்கின்ற காலத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு எமது இலக்குகளை அடைய வேண்டிய இத்தருணத்தில் இவ்வாறான உட்பூசல்களின் காரணமாக தமிழ் மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் இவர்கள் போன்றவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.
இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதபோது இவர்கள் எவ்வாறு மக்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்..