இமயமலை பிரகடனம் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குமா?
[2023-12-29 16:26:08] Views:[314] அண்மைக்காலமாக அனைவராளும் இமயமலை பிரகடனம் தொடர்பாகவே பேசப்படுகின்றன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு பௌத்த குருமாரோடு இணைந்து தமிழ் தரப்பொன்று இவ்வாறான பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வை பௌத்த மகா சங்கத்திடம் இருந்து ஆரம்பித்ததுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இது ஒரு நல்ல தொடக்கம். மக்கள் மத்தியில் இதுவொரு புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இமயமலை பிரகடனம் எனப்படும் பிரகடனமானது இன நல்லிணக்கத்தினை மட்டுமின்றி தமிழ் சமுதாயத்தின் அபிவிருத்தி பற்றியும் பேசுகிறது.
ஆனால் தமிழ் அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இப்பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன நல்லிணக்கம் ஏற்பட்டு எமது சமூகம் உயர்வடைவதை இப்புலம்பெயர் அமைப்புகளும் நமது தமிழ் அரசியல்வாதிகளும் விரும்பவில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
இப்பிரகடன முயற்சியின் மூலமாக இளம் சந்ததியினர் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வர். வடகிழக்கு அபிவிருத்தி அடையும், எம்மவர்கள் தொழிலில் நம்மை மேம்படுத்திக் கொள்வது சிறந்ததா?அல்லது வெளிநாட்டு நபர்கள் வந்து இங்கு தொழில் செய்வது உகந்ததா? நல்ல விடயங்களை அரசியல்வாதிகள் செய்தால் என்ன? ஏனையவர்கள் செய்தால் என்ன? மக்களுக்கான தேவைகளை அரசியல்வாதிகள் மாத்திரம் தான் செய்ய வேண்டும் என்று ஏதேனும் சட்டம் உள்ளதா?
தமிழீழ அரசு ஒன்றை கேட்டு எமது அரசியல் தலைவர்கள் போராடினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி முப்பது வருட காலம் போராடினார்கள் . நாம் எதிர்பார்த்த தமிழீழம் எமக்கு கிடைத்ததா?
நமது தமிழீழ கோரிக்கையை இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் ஆதரித்தா? இனிமேலும் ஆதரிக்கப் போவது இல்லை. சிங்கள அரசுடன் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை அரசியல்வாதிகள் முன்னெடுத்திருந்தனர். ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை. இம்முறை மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுத்து இன நல்லிணக்கத்திற்கான வித்தொன்றை விதைத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் இது இன நல்லிணக்கத்திற்கான சிறந்த ஆரம்பமாகவே கருதப்படுகின்றது. நல்லதொரு முயற்சிக்கு ஏன் இவ்வாறான ஒரு சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உண்மையில் சொல்ல வேண்டுமெனில் இப்பிரகடனத்தை முழுமையாக வாசிக்காத அரசியல்வாதிகளே இவ்வாறு பொய் பரப்புரைகளை முன்னெடுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுவே இவர்களின் உண்மை முகம். உண்மையிலேயே இவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் மக்களுக்கான நல்ல விடயங்கள் வரும்போது அதனை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும்,
இதற்கு மாறாக இவர்கள் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தே பழகிவிட்டனர். எனவே மக்கள் இவர்களை போன்ற அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் தொடர்பாக சற்று விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் எமக்கான தீர்வினை ஒருபோதும் பெற்றுத் தரப் போவதில்லை இதுவே நிதர்சனம் சற்று சிந்தியுங்கள்.
யார் எதை செய்தாலும் மக்களின் எதிர்ப்பார்ப்பு சாந்தி, சமாதானம் மற்றும் மக்களுக்கான தீர்வுமேயாகும்.