புதிய அரசியல் நாடகம் பொது வேட்பாளரா?
[2024-04-30 13:04:15] Views:[260] தமிழ் அரசியல் களத்தை பரபரப்பாகியுள்ள தற்போதைய விடயம் என்றால் ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்த போகும் தமிழ் பொது வேட்பாளர் என்பதே ஆகும்.
இந்த பொது வேட்பாளர் நாடகங்கள் எதற்காக ? திடீரென இவ்வாறான தெரிவுக்கான நோக்கம் என்ன? இது உண்மையிலேயே தமிழ் மக்களின் மீதான அக்கறையா? அல்லது தங்களை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என காட்டிக்கொள்வதற்கான கபட நாடகமா? கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கட்டி எழுப்ப போவதாக தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த எல்லா முயற்சிகளுமே தோல்வியே அடைந்துள்ளன. இவ்வளவு தோல்விகளுக்கு பின்னர் ஒரு புதிய பரிசோதனையை செய்யலாம் என்று தற்போது இவர்கள் முன் வைத்திருக்கும் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயமும் நிச்சயம் நாட்டில் இனவாதத்தையே தூண்டிவிடும் என்று ஒரு சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீண்ட காலமாகவே தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய அன்றாட தேவைகளையும் போராடி பெற்றுக் கொள்ளும் அவல நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அத்தகைய நிலைக்கு காரணமானவர்கள் எமது தமிழ் அரசியல் தலைமைகளே தவிர வேறு எவரையுமே நாம் இவ்விடத்தில் குற்றம் சுமத்த முடியாது.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை, மேய்ச்சல் தரை விவகாரம் ,காணி பிரச்சினைகள் ,குடிநீர் பிரச்சினைகள் ,வாழ்வாதாரப் பிரச்சினைகள் , பொருளாதார பிரச்சினைகள், கொலை ,கொள்ளை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தினந்தோறும் எமது மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால் இவை எதுவுமே எமது அரசியல் தலைமைகளுக்கு இன்று வரை தெரியவில்லை.. ஆனால் இவர்களின் அரசியல் வேட்கையில் அவர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு தமிழ் பொது வேட்பாளர் என்பது மட்டுமே ஆகும்.
அங்கே கச்ச தீவை மீட்போம் என்று இந்திய அரசு தீவிரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இவர்கள் இங்கு எதிர்வரும் தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர் .எவ்வாறு வாக்கு வங்கிகளை தன் பக்கம் ஈர்ப்பது என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களினால் ஒருபோதும் தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப முடியாது அதுவே நிதர்சனம். மேலும் இவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வினையோ அவர்களுக்கு தேவையான அபிவிருத்திகளையோ பெற்றுக் கொடுக்கப் போவதுமில்லை. பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி அதன் மூலம் இவர்கள் அடையப் போகும் இலக்கு என்ன என்பது இவர்களுக்கே தெரியாது. அரசியல் ரீதியாக இவர்கள் ஏதாவது ஒன்றை நகர்த்திக் கொண்டு தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்வதும் மட்டுமே இவர்களின் எதிர்ப்பார்ப்பு.
இவர்களின் சுயநல மற்றும் குறுகிய கால அரசியல் நோக்கங்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். வெறும் வாக்கு வங்கிகளாக எம்மை பார்க்கும் இந்த அரசியல் கள்வர்களிடமிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வது எமது கைகளிலேயே உள்ளது.சிந்தித்து செயற்படுவோம்.