நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - திருகோணமலை மக்கள் !
[2024-05-14 15:13:22] Views:[340] முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுரீதியாக அனுஷ்டிக்கப்பட்ட காலம் போய் இன்று புலம்பெயர் அமைப்புகளாலும் எமது தமிழ் அரசியல்வாதிகளின் உசுப்பேற்றலினாலும் அனுஷ்டிக்கப்படவேண்டிய ஒன்றாகவே மாறிவிட்டது.
ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் நினைவேந்தல் பொதுக்குழுவும் மக்களும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என ஆரம்பத்திலேயே கோரியிருந்தனர்.
ஆனால் எமது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் தங்களின் சுயநலனுக்காக உயிர்நீத்த எமது உறவுகளை இழிவுப்படுத்துகின்றனர் . எமது தமிழ் மக்களின் கண்ணீரை தங்களின் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முயலுகின்றனர்.
மேலும் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஓர் இடத்தில் ஒன்றுகூடி அனைவரும் அமைதியான முறையில் ஆடம்பரமின்றி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அனுஷ்டிக்கவே விரும்புகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர்ந்தோர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே மக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆடம்பரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சிவில் அமைப்புகளின் பொது குழு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம்..இது அரசியல்வாதிகளுக்கான நிகழ்வு அல்ல.இது மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட வேண்டியது.. இதில் அரசியலை திணிக்காதீர்கள் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது நினைவேந்தல் நிகழ்வுகளில் எமது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
" தமிழ் ஐக்கிய மக்கள் "என்னும் சிவில் அமைப்பு சுவரொட்டிகளையும் பதாதைகளையும் வெளியிட்டுள்ளது. கருத்திருகோணமலை மூதூர் மற்றும் நிலாவெளி போன்ற பிரதேசங்களில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவை புலம்பெயர்ந்தோரின் நிகழ்ச்சி நிரலுக்காக தமிழ் மக்களின் உயிரை பலியிடாதீர்கள் . மேலும் இதனை பயன்படுத்தி எமது தமிழ் அரசியல் வாதிகளின் பணப்பைகள் நிரம்பி வழிகின்றன போன்ற பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி நிற்கின்றன .
மேலும் வடக்கிலும் இவ்விடயம் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மக்களிடையே இக்கருத்துக்கள் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.