பூதாகரமாக மாறியுள்ள கச்சத்தீவு விவகாரமும் கண்டுக் கொள்ளாத எமது தமிழ் அரசியல் தலைமைகளும்..:
[2024-05-23 12:40:29] Views:[249] இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிரொலியாக கச்சத்தீவு விவகாரம் வெளிப்பட்டுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே . பாரதீய ஜனதா கட்சியினர் நாங்கள் ஆட்சி பீடம் ஏறினால் கட்டாயமாக கச்சத்தீவை மீட்போம் என சூளுரைத்து வரும் வேளையில் இவ்விடயம் இன்னமும் எமது தமிழ் அரசியல் தலைமைகளின் காதில் விழவில்லை போலும். எந்தவித சலனமும் இதுவரை தென்படவில்லை. சிறிய அளவில் கூட இவர்கள் தங்கள் எதிர்ப்பையோ கண்டனத்தையோ வெளிப்படுத்தாமல் இருப்பது ஏனோ ?
கச்சத்தீவை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் எங்கள் தாயக மீனவர்களின் வாழ்வாதாரம் அதிலேயே தங்கியுள்ளது.ஏற்கனவே இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் எமது கடற்பரப்பில் மீன்வளம் குறைந்த நிலையில் வாழ்வாதாரத்தில் எமது தாயக மக்கள் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் முழுமையாக கச்சத்தீவு இந்தியா வசமானால் எமது தமிழீழ மீனவ சொந்தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் அல்லவா அதன் பின்னர் எமது தாயக மீனவர்களின் எதிர்காலம் என்ன?
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்தியாவின் கைப்பிள்ளையாக செயற்பட்டு வரும் எமது தமிழ் அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் மெத்தனப்போக்கில் இருப்பது எமது மக்களின் உணர்வுகளை பொருட்படுத்தவில்லை என்பதனையே காட்டுகிறது. இவர்கள் இந்தியாவின் வழிநடத்தலின் பேரிலேயே இங்கு அரசியலை மேற்கொள்கின்றனர் பிறகு எப்படி இவர்கள் இந்தியாவிற்கு எதிராக கதைப்பார்கள் ?
எமது நாட்டின் உள்ளக பிரச்சினையில் தமிழருக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என அரசியல் காய் நகர்த்தும் தலைவர்களே கச்சத்தீவு விவகாரத்தில் பாதிக்கப்பட போவது எமது தாயக கடற்றொழிலாளர்களே..! ஏன் இந்த விடயத்தை நீங்கள் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை?
இந்தியாவின் கூலிகளாக தங்களின் குறுகியகால அரசியல் நோக்கங்களுக்காக எமது தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை இந்தியாவிற்கு தாரை வார்க்கும் இந்த தற்குறிகளால் எமது தாயகத்தின் நிலை மாறும் என நினைப்பது எமது அறியாமையே.
இந்தியாவிடம் கச்சத்தீவு விவகாரத்தை கொண்டு செல்ல முயற்சிக்காத எமது தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேசத்திடம் எமது தமிழர் பிரச்சினைகளை கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத் தருவார்களா ?? சற்று சிந்தியுங்கள்.