யாழ் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்கள் வலியுறுத்துவது எதனை..?
[2024-05-28 21:14:02] Views:[237] வழக்கம்போல இம்முறையும் பௌர்ணமி தினமன்று யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நானும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். இதில் மக்கள் அதிகமாக கலந்து கொள்வதாக தெரியவில்லை.
இது மக்களுக்கான போராட்டம் அல்ல இது குறிப்பிட்ட ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். முழுமையாக அப்பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரியவில்லை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவு சொற்ப அளவிலான அதாவது 10 -15 பேரே கலந்து கொள்கின்றனர்.
அனைவரும் உணர்வுபூர்வமாக, உரிமைக்காக குரல் கொடுப்பதாக தெரியவில்லை. அரசியல்வாதிகளின் அரசியல் ரீதியான வழிகாட்டுதலின் பேரிலேயே இவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.
அனைத்து மதத்தினரது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமை. மற்றைய நாட்களில் அமைதியாக இருந்துவிட்டு பௌர்ணமி நாட்களில் அவர்கள் வழிப்பாட்டிற்காக செல்லும் வேளையில் மாத்திரம் போராட்டம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும். அது அம்மக்களின் மனதை பாதிக்கும் அல்லவா? நான் இங்கு பெரும்பான்மை ஆதரவாளனாக இதனை முன்வைக்கவில்லை மனிதாபிமான ரீதியாக இதனை முன்வைக்கின்றேன்.
எமது தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் என எவ்வளவோ இருக்கின்ற போது அவற்றை எல்லாம் விட்டுவிட்டு எமது தாயக மக்களை இனவாத மதவாத ரீதியான விடயங்களில் வழிநடத்த முயல்வது இவர்களின் கீழ்த்தரமான அரசியலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
எத்தனையோ பிரச்சினைகளில் தாயகம் தீர்வு காண முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான மோசமான விடயங்களுக்கு மட்டும் இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது இவர்களின் அரசியல் சுயலாபத்திற்கே.
மேலும் இத்திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டங்களில் தாயக மக்கள் முழுமையாக எவரும் பங்கு கொள்ளவில்லை. இது குறிப்பிட்ட அரசியல்வாதியினதும் அரசியல் கட்சியினதும் செயற்பாடே ஒழிய முழு தாயக மக்களின் வெளிப்பாடு கிடையாது என்பது தெளிவாக புலப்படுகின்றது.
மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் மீண்டும் ஒரு இனவாத மதவாத பிரச்சனைகள் நாட்டில் எழுவதினை விரும்பவில்லை ஆனால் எமது தமிழ் அரசியல் தலைமைகளோ அவ்வாறான பிரச்சினைகளை மேலும் உருவாக்குகின்றனர். தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.