தொடரும் தாயக கடற்றொழிலாளர்களின் அவலங்களை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் தலைமைகள்...!
[2024-05-31 20:42:36] Views:[168] இன்றைய காலத்தில் எமது தாயக கடற்றொழிலாளர்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எமது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் இதுவரை எவராலும் கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.
நமது கடற்றொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல. இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அதற்கான தீர்வுகள் காலம் கடந்தாலும் இந்திய இலங்கை அரசுகளால் இதுவரை எட்டப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
எமது தாயக கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக துன்பத்தையே அனுபவித்து வருகிறார்கள். இந்திய மீனவ விசை படகுகளின் அத்து மீறல்களால் நமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்களின் பொருளாதாரம் முற்றிலும் கடற்றொழிலையே சார்ந்துள்ளது. இந்திய மீனவர்களால் நாள்தோறும் பல லட்சம் பெறுமதியான மீன்வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் என்பது அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
மழைக்காலங்களில் முற்றிலுமாக கடற்றொழிலுக்கு செல்ல முடியாத எமது மீனவர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது ஒருவேளை உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வாழ்வையே போராட்டமாகக் கொண்டு செல்லும் எமது மீனவர்களுக்காக எமது தமிழ் அரசியல் தலைமைகள் எவரும் குரல் கொடுப்பதாக இல்லை. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் எமது தமிழ் தலைமைகள் எமது மீனவர்களின் துயரத்தை இந்திய அரசிடம் தெரிவித்து தீர்வினைப் பெற்றுத்தர வலியுறுத்தவில்லை. அதற்கான முயற்சிகளையும் எடுத்ததாக தெரியவில்லை.
இந்தியாவின் எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்பட்டு வரும் எமது தமிழ் அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் இந்திய அரசுக்கும், இந்திய மீனவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை விட இந்தியா மீதான விசுவாசம் பெரியதாகிவிட்டதா?
தேவையற்ற ஒரு சில விடயங்களுக்காக நாடாளுமன்றத்தில் சத்தம் செய்து வாதாடும் எமது தமிழ் அரசியல் தலைமைகள் கடற்றொழிலாளர்களின் விடயத்தில் மௌனமாகி போனது ஆச்சரியம்? மாவீரர் தினங்களையும் முள்ளிவாய்க்கால் தினங்களையும் நினைவு கூறத் தெரிந்த இவர்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து அணு அணுவாக தினமும் மடிந்து கொண்டிருக்கும் எமது கடற்றொழிலாளர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?
அதே போன்று இந்தியாவில் இருந்து கொண்டு ஈழத்தின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் இந்திய கடற்படையினரால் நமது தாயக மீனவர்கள் அச்சுறுத்தப்படுவதும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் தெரியாமல் போனது என்னவொரு மர்மம் என்று தெரியவில்லை?
எமது மீனவர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகள் பெறப்பட வேண்டும். அவர்களின் அபிலாசைகளும் அவர்களுக்கான வழிகாட்டல்களும் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். தொழில் ரீதியாக அவர்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான அனைத்து வழிவகைகளும் செய்து தரப்பட வேண்டும். இதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எமது தமிழ் அரசியல் தலைமைகளின் கைகளில் உள்ளது. சற்று எமது மக்களுக்காகவும் யோசியுங்கள்.