இந்திய தேர்தல் முடிவும் கச்சத்தீவும்
[2024-06-07 21:13:15] Views:[206] இந்திய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் அரசியல் மாற்றங்கள் எமது தமிழர் அரசியலில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்தக் கூடியவை. அந்த வகையில் இத்தேர்தலினால் நாம் அடைந்து கொள்ள கூடிய நன்மைகள் என்ன? அந்த வகையில் இந்தியா ஈழத்தமிழர் விடயத்தை எவ்வாறு அணுகப்போகிறது? உள்ளிட்ட எதிர்ப்பார்ப்புகள் இப்பொழுதே எழ ஆரம்பித்துள்ளன.
எதிர்கால விளைவுகளை ஆராயும் அதே சந்தர்ப்பத்தில் இப்போது நாம் ஒரு நினைவூட்டலையும் பார்க்க வேண்டும் .அதாவது தேர்தல் பிரச்சாரங்களின் போது பிரதமர் மோடி அவர்களின் முக்கிய வாக்குறுதி "கச்சத்தீவினை மீட்போம்" என்பதாகும்.
எவ்வாறு இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கச்சத்தீவு மீதான கவனம் அதிகரிக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
கச்சத்தீவு எமது தமிழீழ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார அடையாளம். எமது மீனவர்களின் பொருளாதார நிலை அதிலேயே தங்கியுள்ளது. ஒரு சிலவேளை அது கைவிட்டுப் போகும் எனில் எமது மக்களின் வாழ்வாதாரம் என்றவாகும் என்ற அச்சம் பரவலாகவுள்ளது.
ஆனால் இம்முறை தேர்தலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு சற்று வலிமையானதாக அமைய வாய்ப்புள்ளது. அத்தோடு மத்திய அரசு அயல்நாட்டு உறவுகள் என்று பார்த்தாலும் தமிழ்நாடு இவ்விடயத்தில் ஒருநாளும் பின்வாங்க போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளது. எனவே மாநில அரசுகளின் அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் கச்சத்தீவு சார்ந்த முடிவுகளை இந்திய இறையாண்மைக்கு ஏற்ப இந்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தை ஆசிய கண்டத்தில் விரும்பாத இந்தியா பாதுகாப்பின் பொருட்டு ஆசியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வரும் வேளையில் கச்சத்தீவினை தீவிரமாக கையாளும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காந்தி தேசம்தான் தமிழருக்கான தீர்வை பெற்று தரும் என பகல் கனவு காணும் எமது தமிழ் அரசியல் தலைமைகள் இனிமேலாவது அவர்களது வாய்ப்பூட்டுக்களை திறப்பார்களா? எமது நாடாளுமன்றத்தில் மாத்திரம் கூக்குரலிடும் எமது தமிழ் தலைமைகள் இந்தியாவிடம் பேச்சு வார்த்தைக்குச் செல்லும்போது இவ்விடயங்களை அழுத்தமாக வலியுறுத்தினால் சிறப்பாக இருக்கும்.
எப்போதுமே எமது ஈழத் தமிழ் மக்களின் கண்ணீரை கூட அரசியலாக்க முயலும் எமது தமிழ் தலைமைகள் கச்சத்தீவையும் அரசியலாக்க முனைவார்களோ தெரியவில்லை . ஏற்கனவே இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில் கச்சத்தீவு மீட்கப்படும் பட்சத்தில் எமது தாயக கடற்றொழிலாளர்களின் எதிர்காலம் முற்றிலும் கேள்விக்குறியாகும் என்பதை எமது தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு கணமாவது சிந்திக்க வேண்டும்.
இனவாத மதவாத கோமாளி கூத்துக்களை காட்டி எமது தமிழ் மக்களை ஏமாற்றுவதை விடுத்து இவ்விடயத்திலாவது முறையான தீர்வைப் பெற்றுத் தாருங்கள்.