குப்பைகளால் நிரம்பி வழியும் தமிழர் தாயகம் : கண்டுக்கொள்ளாத எமது தமிழ் தலைமைகள்?
[2024-06-12 12:55:23] Views:[227] பொதுவாகவே எமது தமிழர் தாயகப் பகுதிகளில் திண்ம கழிவுகளை அப்புறப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் நிலவிவருகின்றன. கடந்த காலங்களில் இருந்ததை விட தற்போது குப்பைகள் கொட்டுதல் என்பது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ் நகரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் குப்பைகள் குவிக்கப்பட்டு மலை போல் காட்சியளிப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பொது இடங்களில் இவ்வாறு காணப்படுகின்றமையால் அப்பாதைகளினூடாக பயணம் செய்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குப்பைகளில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் அப்பிரதேசம் முழுவதையும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.குப்பைகள் தேங்கியுள்ள நீரானது டெங்கு உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களை பரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது.
மோசமான நிலைமையால் மக்களின் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. யாழ் நகரம் மாத்திரம் அல்ல வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு ,திருகோணலை ,மருதமுனை ,கிளி நொச்சி போன்ற பல்வேறு பிரதேசங்களிலும் இப்பிரச்சினை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய பேருந்து நிலையமும் அதனை அண்மித்த பிரதேசங்களும் குப்பைகளால் நிரம்பி வழிவதை பலமுறை ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய பேருந்து நிலையமும் அதனை அண்மித்த பிரதேசங்களும் குப்பைகளால் நிரம்பி வழிவதை பலமுறை ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் .கைவிடப்பட்ட சன சமூக நிலைய கட்டிடங்கள் பல இன்று குப்பைகள் கொட்டும் இடங்களாக மாறிப் போய் உள்ளன. மருத்துவ கழிவுகள் போன்றவைகளும் ஆங்காங்கே பொது இடங்களில் கொட்டப்பட்டு வருவது சுகாதார ரீதியான சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இவற்றுக்கு யார் காரணம் உள்ளூராட்சி மன்றங்கள் இந்த விடயத்தை சரியாக மேற்கொள்ள தவறிவிட்டனவா? உள்ளூராட்சி மன்றங்கள் முறைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன? உள்ளூராட்சி மன்றுகளிடம் எவர் ஒருவரும் இது தொடர்பாக கலந்துரையாடவில்லையா?
தாயகத்தின் அபிவிருத்தி தான் எங்களுக்கு முக்கியம் ; தமிழர் தாயகத்தை அழகுப்படுத்துவோம் ; ஆச்சரியப்படுத்துவோம் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் எவரும் இதைப் பற்றி சற்று நேரம் சிந்திக்கவில்லையா ? ஒருநாளும் எமது தமிழ் மக்களின் இவ்வாறான அடிப்படை பிரச்சினைகள் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
ஏனெனில் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு மாத்திரம் தானே தமிழர் தாயகம் தேவைப்படுகின்றது. அவர்களது இருப்பிடங்கள் சொகுசு இல்லங்கள் அமைந்திருப்பது கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் அல்லவா? தென்னிலங்கை அரசியல்வாதிகள் கள்வர்கள் என்றாலும் ஓரளவேணும் இவ்வாறான விடயங்களில் சிறந்த ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். தென்னிலங்கை பிரதேசங்களோடு ஒப்பிடும் பொழுது எமது பிரதேசங்களில் குப்பைகள் ஒழுங்குபடுத்தி அப்புறப்படுத்தல் செயன்முறை என்பது குறைவாகவே உள்ளது.எமது தமிழ் தலைமைகளோ காலங்காலமாக தேர்தல் வாகக்குகளாக மட்டுமே எமது தமிழ் மக்களை நோக்குகின்றனர்.
உண்மையில் எமது தமிழ் மக்களின் ஆரோக்கியத்திலும் சுகாதாரத்திலும் அக்கறையுள்ள எவருமே இதனைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உண்மையிலேயே தனது மக்களின் ஆரோக்கிய மக்களை பற்றி சிந்திக்கும் தலைமைகளாக இருப்பின் இவ்விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி இருக்க முடியும் ஆனால் இவ்வாறு அவர்கள் செய்யவில்லை.
பொது மக்களாகிய நாம் இவ்விடயத்தில் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும் ஏனெனில் பொது இடங்கள் என்பது நாம் பயன்படுத்துவது அதனை மிகவும் அவதானமாக கையாள வேண்டியது எமது கடமை. நாம் குப்பைகளை முறையாக குப்பை தொட்டில்களில் வீசுவதற்கும் சரியாக அதனை அப்புறப்படுத்துவதற்கும் பழகிக்கொள்ள வேண்டும்.
இன்றைய நிலைமையில் எமது தாயகத்தை எமது அரசியல் தலைமைகள் சரியாக கொண்டு செல்வார்கள் என்பது குறிப்பிட முடியாத விடயம் ஆகும். மேலும் இவ்விடயத்தை அவர்கள் ஒருபோதும் சரிசெய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு தற்போது தேவை தலைமை பதவியும் பொது வேட்பாளரும் மாத்திரமே ஆகும். இவர்களிடத்தில் தான் எமது தமிழ் மக்களின் தேசிய அரசியல் கையளிக்கப்பட்டுள்ளது என்பது எமது தமிழ் மக்களின் தலைவிதியாகும்.