கலந்துரையாடலில் மறந்து போன எமது தாயக கடற்றொழிலாளர்களின் கண்ணீரும் கச்சத்தீவும்..!!
[2024-06-24 21:04:26] Views:[197] கடந்த வாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கும் எமது தமிழரசியல் தலைமைகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
கலந்துரையாடல் எமது தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா? காத்திரமான ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றி சற்று ஆராய்வோம்.
அறியப்பட்ட தகவல்களின் பிரகாரம் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம் .ஏனெனில் இக்கலந்துரையாடல் எமது தமிழ் மக்களுக்கானதோ அல்லது எமது தாயக அபிவிருத்திகானதோ இல்லை. முற்று முழுதாக எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு பொதுத்தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது பற்றியே பிரதானமாக ஆராயப்பட்ட ஒரு கலந்துரையாடலாகவே கூறப்படுகின்றது.
இன்று எமது தமிழர் தாயகம் எதிர்நோக்கி வரும் மிகப்பெரிய பிரச்சினை இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் கச்சத்தீவு இந்திய வசமாகும் என்ற அச்சமுமே ஆகும்.கடந்த வாரம் கூட எமது கடற்றொழிலாளர்கள் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் எமது தாயக கடற்றொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரில் மிதந்து கொண்டிருக்க அவற்றையெல்லாம் மறந்துவிட்ட எமது தமிழ் அரசியல் கோமாளிகள் ஒன்றுக்கும் உதவாத விடயங்களை வெளிவகார அமைச்சருடன் கலந்துரையாடியிருப்பது வேடிக்கையானது.
இவர்களின் இந்திய விசுவாசத்தை காட்டுவதற்கு இதுவா நேரம்? இக்கலந்துரையாடல் எமது தலைமைகளின் போலி அரசியல் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளது எம் இனத்தின் பச்சை துரோகிகள் இவர்கள்தான் .
கடிதம் மூலம் மீனவர் பிரச்சினை அறிய தந்துள்ளதாக கூறப்படுகின்றது இன்றைக்கு கலந்துரையாடி தீர்வை பெற வேண்டிய அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்றால் அது எமது தாயக கடற்றொழிலாளர்களின் பிரச்சினையே.அதனை எவருமே பலமாக வலியுறுத்தவில்லை மேலும் பேச்சுவார்த்தையில் கச்சத்தீவு கண்டுக்கொள்ளப்படவில்லை. ஏழை மீனவனின் கண்ணீர் அம்பலம் ஏறவில்லை போலும்.இதுதான் எங்களின் தலைவிதியா?
எமது அரசியல் நச்சுப் பாம்புகள் தங்களின் அரசியல் நிலைப்பை தக்க வைத்துக்கொள்ள இந்தியாவிடம் தங்கள் நற்பெயரை தொடர்ந்து முன்னிறுத்திக்கொள்ள எமது மக்களின் அவலத்தை மறைத்து போலி சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி விட்டு வந்திருக்கின்றனர்.
எமது தமிழ் தேசிய அரசியலில் 13 ஆம் சீர்திருத்தம் பொதுத்தமிழ் வேட்பாளர் போன்றவை தற்போது தேவையில்லா ஆணிகளே ! ஆனால் இந்தத் தந்திர நரிகள் இவர்களின் கடைசிகாலம் எட்டும்வரை ஆசனத்தை அலங்கரிக்க வேண்டும் என்ற பதவி ஆசையில் இதுவரை மௌனமாக இருந்தனர். அவர்களின் பின்னர் எமது தாயகத்தை வழிநடத்த அவர்களால் தெரிவு செய்யப்பட்ட சில தற்குறிகளும் அவ்வாறே இருப்பது எமது தாயகத்தின் தலையெழுத்தாகும்.
இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட சில பிரந்தியங்களிலுள்ள அரசியல் தலைவர்களும் சமய தலைவர்களும் தமிழீழ மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் ஒன்றை வழங்குவதே என்று கூறிக்கொண்டு மறுபக்கத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இதுபற்றி எமது அரசியல் தலைமைகள் யாரும் கதைப்பது கிடையாது அதற்கு எதிராக குரல் கொடுப்பதும் கிடையாது தமிழீழம் வழங்க வேண்டும் என கூறுபவர்கள் மறுபக்கம் அவர்களின் வாழ்வாதாரமான கச்சத்தீவை பற்றி ஒருபோதும் சிந்திப்பது கிடையாது. இவற்றுக்கு எதிராக எமது தமிழ் அரசியல் தலைமைகள் குரல் கொடுப்பதோ அல்லது கண்டனங்களை வெளியிடுவதோ கிடையாது.
இந்தியாவிற்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர்கள் தற்போது இந்திய பிரதிநிதி ஒருவரை நேராக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தப்போதும் தங்கள் மக்களுக்கான பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைப்பது தான் ராஜதந்திர மூலோபாயம் ஆகும். ஆனால் அதனை செய்யாது இத்தமிழ் அரசியல் பச்சோந்திகள் ஊமைகளாகிப் போனது எம்மினத்திற்கு செய்யும் பச்சை துரோகமாகும்.
இத்தகைய தமிழ் தேசிய விரோதிகளை வைத்துக்கொண்டு நாம் அடையக்கூடிய இலக்கு ஒன்றுமே இல்லை . இவர்களை துரத்தி அடித்தால் மட்டுமே அல்லது இப்புல்லுருவிகளை வேரறுத்தால் மட்டுமே எமது தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை