தீவிரமடையும் கடற்றொழிலாளர் பிரச்சினை: மௌனம் காக்கும் தமிழ் தலைமைகள்....!
[2024-06-27 20:45:15] Views:[166] இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளமை தெற்காசிய பிராந்தியத்தை சற்று பரபரப்படைய செய்துள்ளது. நேற்றையதினம் அவசர அவசரமாக இரு அரசாங்கங்களுக்குமிடையிலும பேச்சுவார்த்தை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கம் தங்களது மீனவர்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
மேலும் இராமேஸ்வர மீனவர்கள் நேற்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தமையினைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மீனவர் பிரச்சினை சம்பந்தமாக விரைவாக கடிதமொன்றை எழுதியிருந்தார். இந்தியாவின் தமிழ்நாடு உட்பட ஏனைய பிராந்திய அரசியல் தலைவர்களும் மீனவர் பிரச்சினை தொடர்பாக கடுமையான தொனியில் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் எமது நாட்டில் குறிப்பாக எமது தாயகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவர் ஒருவருமே இது பற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை . அனைவருமே ஊமைகளாகியுள்ளனர்.கடந்த இருதினங்களுக்கு முன்னர் எமது கடற்படை வீரர் ஒருவர் எமது தாயக மீனவர்களுக்காக தன்னுயிரை இழந்துள்ளார். அவரின் இறப்பிற்கு எமது தாயக கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் நன்றியுடன் கூடிய அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் நேற்றைய தினம் எமது மீனவர்களை இந்திய கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். நாளுக்கு நாள் எமது கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை அரசியலில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எம்மோடு இருக்கும் எம்மினத்தின் காவலர்கள் என தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் மூடர் கூட்டத்தினர் எவரும் இதுவரை இவைப்பற்றி சிறிதேனும் வாய்த்திறக்கவில்லை.
தமது மக்கள் அல்லல் படுவதை பார்த்துக் கொண்டிருப்பது அவர்களின் கையாலாகாதத் தன்மையை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. இந்திய தமிழ் அரசியல் வாதிகள் கொந்தளித்துக் கொண்டிருக்க எமது ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளோ எந்த மூலையில் ஒளிந்துள்ளார்கள் என தெரியவில்லை. அக்கடற்படை வீரர் போன்று உயிரை தியாகம் செய்ய வேண்டாம். குறைந்தபட்சம் கண்டிக்கும் வகையில் குரல் எழுப்பலாம் அல்லவா? எம்மக்களுக்காக இந்தியாவிடம் பேசுவதற்கு ஏன் இந்த அச்சம்?
மீனவர் பிரச்சினையை திசைத்திருப்பவே திடீரென காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை கிள்ளிவிட்டிருந்தனர் இந்த ஊழல் பேர்வழிகள். உண்மையில் சொல்ல வேண்டுமெனில் மரண வீட்டில் கூட அரசியல் வருமானம் தேடும் எமது தமிழ் அரசியல் கோமாளிகள் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்துவது கேலி கூத்தாகும். குரங்கு கையில் கிடைத்த பூமாலைப் போன்றுதான் எமது தமிழ் அரசியல்வாதிகளின் கையில் கிடைத்துள்ள எமது தமிழ் மக்கள் வாழ்க்கை. நாம் இறந்தாலும் வேடிக்கை மட்டும் பார்க்கத் தெரிந்த இந்த அரசியல் கள்வர்களிடம் இனியும் ஏமாறப் போகிறோமா?