திரைப்பட கதாநாயகர்களாகும் எமது மலையக அரசியல்வாதிகள்
[2024-07-29 12:29:29] Views:[294] அண்மைக்காலமாக எமது மலையக பிரதிநிதிகள் இந்தியாவில் போன்று குறிப்பாக தமிழ்நாட்டின் வழியில் அரசியல் நிகழ்வுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது .ஆம் நாம் பார்த்த வகையில் இவர்கள் தங்களை தமிழ் திரைப்பட கதாநாயகர்கள் போல காட்டிக் கொள்ள முனைவதாக தெரிகின்றது. அத்தோடு அதிரடி அரசியல் நடவடிக்கைகள் சில திரைப்பட பாணியில் அமைந்திருப்பது அவர்களை பின்பற்றும் இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு செல்லும் என்று கூறினால் மறுப்பதற்கு இல்லை.
ஏற்கனவே எமது மலையக சமுதாயம் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி அனைத்து விடயங்களிலும் இந்திய கலாசாரத்திற்கு அடிமையாகி உள்ள நிலையில் தற்போது அரசியல்வாதிகளும் பூரணமாக இந்தியாவினை பின்பற்றி வருவது ஆரோக்கியமான விடயம் அல்ல. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது அத்தகைய அடையாளத்தை நாம் தொலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
அரசியல் ரீதியான பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து பொறுமையாக தீர்வு காண்பதுதான் தலைமைகளின் கடமையாகும்.அதைவிடுத்து திரைப்பட பாணியில் அதிரடி காட்டி பின்னர் நீதிமன்றம் வரை போய் நிற்பதெல்லாம் நல்லதொரு தலைமைக்கு அழகல்ல.
இத்தகைய அரசியல்வாதிகளை பின்பற்றும் இளைஞர்களும் ஒரு பிரச்சினையென்றால் அவ்வரசியல்வாதிகளைப் போன்றே அடிதடிக்குள் இறங்குவார்கள். இது தவறான உதாரணமாக அமைந்துவிடாதா ? ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட பாணியில் மது, போதை என தவறான வழியில் சமூகம் பயணித்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய விடயங்கள் வடகிழக்கில் காணப்படும் வாள்வெட்டு குழுக்கள் போன்ற ஆபத்தான விஷகிருமிகளை எமது சமூகத்திலும் விதைக்குமல்லவா?
அரசியல் மட்டுமல்ல ஆன்மிகத்திலும் தற்போது இந்திய ஆதிக்கம் தொடர்கிறது. புதிது புதிதாக யார் யாரோ வருகின்றனர்.மக்களின் அனுமதியோ விருப்பமோ அவர்களுக்கு தேவையில்லை.அரசியல்வாதிகளின் பின்னணியில் அவரவர் விருப்பத்திற்கு மலையகத்தை கையாளுகின்றனர். கேட்பார் எவருமில்லை என்று கருதி விட்டார்கள் போலும். இல்லையென்றால் தென்னிலங்கை ஊடகங்கள் சொல்வதுபோல் மலையகம் இந்திய அரசின் அடிமையாகிவிட்டதா? இதனை மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.