பொது வேட்பாளர் யார்..? இழுத்தடிக்கும் தமிழர் தரப்பு...!
[2024-08-07 16:19:02] Views:[125] நேற்று முன்தினம் இடம்பெற்ற பொது வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் பொது வேட்பாளர் யார் என்று தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். நேற்றைய கலந்துரையாடலில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தேர்வு செய்வதில் நீண்ட விவாதங்கள் இடம் பெற்று விவகாரமானதால் பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் தமிழராகிய நாம் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் எமது அரசியல் தலைமைகள் எமது தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல விடயத்தில் இணைந்து செயற்பட்டதாக வரலாற்றில் இதுவரை பதிவு ஏதும் இல்லை. அவர்களின் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே அவர்கள் ஒன்றிணைவார்கள். அவர்களுக்கு எமது மக்கள் பற்றியோ எமது தாயகத்தின் எதிர்காலம் பற்றியோ பெரியதொரு கரிசனை என்பது எப்போதுமே கிடையாது.
ஆராய்ந்து பார்த்தால் உண்மையிலேயே தமிழ் தேசியம் என்ற பாதையில் எமது தாயக மக்களது அரசியல் அரங்கு அமைந்து வருகின்றதா என்பது கேள்விக்குறியே இது உண்மையில் நாம் வருந்த வேண்டிய விடயமாகும். மூன்று தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களுக்கு வழங்கிய இழப்புகளை விட முக்கியமானதொரு விடயம் என்னவென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெளிவாக முன் கொண்டு செல்வதற்கு உரிய தமிழ் தலைமைகள் இல்லாததுதான் என்பதே உண்மையாகும்.
எமது தமிழ் மக்கள் மீதான அழுத்தங்கள் பிரச்சினைகள் எதையும் இன்றைய நவீன தமிழ் தேசியவாதிகளால் முன்வைக்கப்படுவதில்லை. இவ்வாறான சூழலில் தான் தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துதல் என்ற பொய் விம்பம் என்று தோற்றம் பெற்றிருக்கின்றது. கடந்த கால தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் தமிழர் தரப்பிற்கு தோல்லவியையும் ஏமாற்றத்தையுமே விட்டுச் சென்றிருக்கின்றது.
எனவே பொது வேட்பாளர் சித்தாந்தம் தமிழர் தரப்பு நிலைப்பாட்டினை தேர்தலில் நிச்சயம் வெளிப்படுத்தும் என்று அரைகூவல்கள் கொடுத்து வரும் எமது அரசியல் தலைமைகள் அதனை சரியாக கட்டமைக்க தவறிவிட்டனர் என்றே தோன்றுகின்றது. பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாது அதனைக் கூட இவ்வாறு இழுத்தடிக்கும் எமது அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு எவ்வாறு எமது தமிழ் மக்களின் இலக்குகளையும் உரிமைகளையும் நாம் அடைந்து கொள்ள முடியும் எண்ணிப் பாருங்கள்.
நாம் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரிடமிருந்து அதாவது சிங்களவர்களிடமிருந்து எமது உரிமைகளை நாம் பெற்றுக் கொள்வததென்பது கடினம் என்று இனவாதம் பேசி எமது மக்களை எப்பொழுதுமே இனவாத கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் எமது அரசியல் தலைமைகள் தான்.
இவர்களின் இந்த கபட நாடகங்கள் அரசியலில் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புதுமுக அரசியல் புள்ளிகளை உருவாக்கிக் கொள்வதற்காகவும் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு போலி விம்பமே இப்பொது வேட்பாளர் கருத்தாக்கமாகும். இதில் கூட அவர்களுக்கு ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை எமக்கான ஒரு பிரதிநிதியை ஒன்று சேர்ந்து தீர்மானிக்க முடியவில்லை இத்தகைய முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் எதிர்கால தாயகத்தை காப்பாற்ற போகிறார்களா நிச்சயமாக இல்லை.....