yarlathirady.com

மாறாத மலையக மக்களின் வாழ்வியல் நிலையும்; மாறவிடாத தலைமைகளும்..!

[2024-08-26 12:14:29] Views:[388]

மலையகத்தின் நிலை மற்றும் அம்மக்களின் வாழ்வியல் நிலை என்பன இன்னமும் மோசமான நிலையில் தான் உள்ளது. அரசும், சம்பள நிர்ணய சபை என்பன பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வை உறுதி செய்தாலும் இன்னும் ஒரு சில கம்பெனிகள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அரசியல்வாதிகளோ அனைத்துமே சரியாகி விட்டது போல பூசி மெழுகி வருகிறார்கள்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள தெரியாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் தலைமைகள் எவ்வாறு எம் மக்களை சரியான வழியில் வழிநடத்த போகிறார்கள்? இதுவரையில் சரியான குடியிருப்பு வசதிகள் கூட இல்லாத சமூகம் எமது மலையக சமூகமே.

பெரும்பான்மையான மக்கள் இன்னும் லயன் (தொடர்) குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதற்கான விடிவு எப்போது கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து மலையக சமூகம் ஏங்கிக்கொண்டிருக்கின்றது.

மலையகத்தின் பிரதான நகரங்கள் பல குப்பை கூழங்களால் நிரம்பி வழிகின்றன. பல நகரங்களில் வடிகால் அமைப்புகள் சரிவர கிடையாது. மழைக்காலங்களில் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே மக்கள் நகரங்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக மலையகத்தின் ஏனைய நகரங்களைவிட ஹட்டன் நகரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. துர்மணம் வீசிக்கொண்டு சுகாதார முறையற்ற நிலையில் பேருந்து நிலையங்கள் காட்சியளிக்கின்றன.

அதுமட்டுமா அநேக தோட்டப்புற பகுதிகள் பலவற்றுக்கு ஒழுங்கான போக்குவரத்து வசதி இல்லை, பாதைகள் இல்லை, தங்கள் வேலைகளை முடித்தாலும் இரண்டு மணித்தியாலங்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் அவலநிலை இன்னும் தொடர்கிறது.

மேலதிக வகுப்புகளுக்கு சென்று வரும் பாடசாலை மாணவர்களின் நிலையும் இதுவேயாகும். ஒரு அவசர நேரத்தில் ஒருவரை வைத்தியசாலை அழைத்து செல்வது என்றாலும் போக்குவரத்து பாதைகள் இன்மையால் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இத்தகைய பிரச்சினைகள் இருப்பது எமது அரசியல் தலைமைகளுக்கு நன்றாக தெரிந்திருப்பினும் தெரியாதது போலவே காட்டிக் கொள்வார்கள். எமது மலையக சமூகம் முன்னேறி விட்டது என ஊடக சந்திப்புகளிலும் அரசியல் மேடைகளிலும் முழங்கும் அரசியல் தலைமைகளே!

எமது மலையக சமுதாயம் சற்று முன்னேறி இருப்பது உங்களால் அல்ல எமது மலையகத்தை சார்ந்தவர்களின் விடாமுயற்சியினால் அயராத கல்வியினால் மட்டுமே. தங்களது சுய முயற்சியாலேயே அவர்கள் தங்களை மேல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர உங்கள் முயற்சியின் காரணமாக அல்ல.

இன்னமும் மத்திய கிழக்கு நோக்கி எமது மலையக தாய்மார்கள் பணி பெண்ணாக தொழிலுக்காக சென்று கொண்டு தான் இருக்கின்றனர். இதனை எந்த ஒரு அரசியல் தலைமையும் தடுத்து தீர்வு கண்டதாக வரலாறு இல்லை.

சொகுசு பங்களாக்களில் ஆடம்பர வாழ்க்கை வாழும் உங்களுக்கு, கொட்டும் மழையில் அட்டைகளிடமும் குளவிகளிடமும் கடிப்பட்டு இரத்தம் சிந்தி உழைக்கும் மலையக சமுதாயத்தின் துயரம் 200 வருடம் அல்ல 2000 வருடங்கள் கடந்தாலும் புரியாது.

தமிழர் தாயகமும் மலையகமும் முன்னேறாமல் போனமைக்கு எமது தமிழ் அரசியல்வாதிகளே காரணம். பேச வேண்டிய முக்கிய பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதுமில்லை, பேசுவதும் இல்லை. அதனாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு தென்னிலங்கைக்கு தெரியாமலே போய்விட்டன. இத்தகைய அரசியல்வாதிகள் எமது சமூகத்திற்கு தொடர்ந்தும் வேண்டுமா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.