தவறான பாதையில் பயணிக்கும் தாயக இளைஞர் யுவதிகள்!
[2024-12-23 12:17:31] Views:[251] தாயக இளைஞர் யுவதிகள் பலர் தற்காலத்தில் தவறான பாதையொன்றை நோக்கி பயணிப்பதாக தோன்றுகிறது. கடந்த காலத்தில் தாய் மண்ணுக்காக தன்னுயிர் நீத்த இளைஞர் யுவதிகளுக்கு நேர் எதிரான மாறுபட்ட நடவடிக்கைகளுக்கும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் ஒரு தரப்பாகவே தற்போதைய தாயக இளைஞர் தரப்பினர் காணப்படுகின்றனர்.
போதைப்பொருள் பாவனை, கேளிக்கை விருந்துகள், பண்பாட்டை மீறும் அநாகரிக செயற்பாடுகள், இந்திய சினிமாத் துறை மோகத்திற்கு அடிமையாகுதல் , பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற விடயங்களில் தன்னை ஈடுபடுத்தி தன்னிலை இழந்து வருகின்றனர். கேளிக்கை விருந்துகளில் போதைமுற்றி சில சமயம் அடிதடி சண்டைகள் அரங்கேறுவதும் உண்டு. இவர்கள்தான் தாயகத்தின் எதிர்காலமா?
இவர்கள்தான் தாயகத்தை மாற்றப் போவதுபோல் இடையே அரசியல் ரீதியான உரிமை கோரி ஒரு சில நாடகப் போராட்டங்கள் வேறு.. இவர்களின் ஒரு சில செயற்பாடுகள் தாயகத்திற்காக தன் உயிர்நீர்த்த உண்மையான போராளி இளைஞர் யுவதிகளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
என்ன செய்தாலும் அவர்களின் உன்னத நிலையை இப்போது இருக்கும் இவர்களால் எட்டவே முடியாது. கடந்த காலத்தில் நமது இளைஞர்கள் உயிர் தியாகம் செய்தது எதற்காக? ஆவா குழுக்களை உருவாக்குவதற்காகவா ? போதைப்பொருள் பாவனைக்கு அடிமைகளாவதற்காகவா? கள்வர்களை உருவாக்குவதற்காகவா? சிந்தியுங்கள்.
போதைப்பொருள் பாவனையால் பல இளைஞர்கள் தங்களின் வாழ்வினை இழந்துள்ளனர் . இரவு கேளிக்கை விருந்துகளில் பெரும்பாலும் சாதாரணமாகவே போதைப் பொருள்கள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பது ஒரு சில தகவல்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.
உயர் கல்வி மட்டும் போதாது யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் .எமது தாயகத்திற்கும் தாயக மக்களுக்கும் தேவையானவை எவை என்பதை சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதனை உள்ளீர்த்தல் வேண்டும்.
எமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுவது எமது இளைஞர் யுவதிகளின் பொறுப்பாகும் .ஆனால் இன்று நிலைமை தலைகீழ் இந்திய கலாசாரத்திற்கு அடிமையாகி சமூக வலைதளங்களில் இந்தியர்களைப் போன்று தங்களையும் வெளிப்படுத்தி பிரபலப்படுத்திக் கொள்ள எந்தநிலைக்கு வேண்டுமானாலும் செல்ல இவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.
மாவீரர் தினம் மற்றும் முள்ளிவாய்க்கால் தினம் போன்ற நாட்களில் மாத்திரம் தாயகப் பற்றாளர்கள் போல தங்ளை காட்டிக் கொள்கிறார்கள்.
தாயகப் பற்று என்பது தாயகத்தில் தற்போதிருக்கும் அரசியல் தவிர்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலே ஆகும். குறைந்தபட்சம் தாயகத்தில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளையாவது அப்புறப்படுத்த சிரமதானம் ஒன்றை ஏற்பாடு செய்யலாம். எமக்காக உயிர்நீத்த எமது உறவுகளின் கனவை நனவாக்க நல்வழியில் பயணிக்க வேண்டும். " சிறிலங்கா க்ளீன்" செயற்திட்டத்தைப் போன்று தாயகத்தை தூய்மைப்படுத்துவோம் என்பது போல ஒரு திட்டத்தை கொண்டுவரலாம்.
பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து பயனுள்ளவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளின் பின்னால் அணி சேர்வதை தவிர்த்து தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்குவோம்.போராட்டங்களில் இறங்கி புரட்சியாளர்களாக மாறுவதற்கு முன்னர் சமூக அக்கறையாளர்களாக முதலில் மாறவேண்டும்.இதுதான் காலத்தின் கட்டாயமும் ஆகும்.
அதனை நீங்கள் உணர வேண்டும். பிற சமூகங்களுக்கு மத்தியில் எமது சமூகமும் பெருமையுடன் வாழ செய்வது இன்றைய இளைஞர் யுவதிகளின் கடமையாகும். எனவே தேவையற்ற விடயங்களில் கவனத்தை சிதற விடாது நல்லதொரு இலக்கை நோக்கி பயணியுங்கள்.