காஷ்மீரில் மர்மமான முறையில் 17 பேர் மரணம்..!!
[2025-01-24 22:02:17] Views:[260] காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியின் பதால் கிராமத்தை சேர்ந்த 3 குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் 7ஆம் திகதி முதல் கடந்த 19ஆம் திகதி வரை ஒருவர் பின் ஒருவராக 17 பேர் உயிரிழந்துள்ளமை அப்பிரதேச மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இறந்தவர்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டன.
அங்கு சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பதால் கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இந்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிகழ்வுகள் நடத்தவோ, மக்கள் கூடுவதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. 17 பேர் மரணத்துக்கு விடை தெரியாததால் பதால் கிராமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த காஷ்மீரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.