ஏப்ரல் 26 இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனம்;
[2025-04-24 17:20:31] Views:[92] புனிதர் போப் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் 21 நித்திய இளைப்பாறிய கத்தோலிக்க திருச்சபை தலைவரான புனிதர் போப் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை ஏப்ரல் 26 ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
உலக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இலங்கையில் ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி சகல அரச நிறுவனங்களும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், 2013-ஆம் ஆண்டு, போப் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர்.