நாகை-காங்கேசன்துறை கப்பல் சேவையின் அடுத்த கட்ட முயற்சியான ஆன்மீக சுற்றுலா.!
[2025-05-04 09:13:47] Views:[155] ராமர் பாலத்தில் 1km துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகை-இலங்கை தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
நாகையில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை, செவ்வாய்கிழமை தவிர்த்து, வாரம் ஆறு நாட்கள் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது.
தற்போது சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்ற காரணத்தினால் பயணியரை ஊக்குவிக்கும் வகையில், 22kg அளவிலான பயண பொதி இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் 9,200/= இந்திய ரூபாயாக இருந்த இருவழி கட்டணம், பெப்ரவரி 22 முதல், 8,500/= ரூபாயாகவும், தற்போது 8,000/=ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளை ஊக்குவிக்க, புதிய பெக்கேஜ் அறிவிக்கப்படுகிறது. இதன்படி, 15,000/= இந்திய ரூபாய் பெக்கேஜில், இருவழி பயண கட்டணம் உட்பட தங்கும் வசதி, வாகனம், மூன்று இரவுகள் தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மற்றொரு பெக்கேஜில் இலங்கையில் ஐந்து இரவுகள், ஆறு நாட்கள் தங்குவதோடு, உணவு, தங்குமிடம், வாகனம் உட்பட ஒரு நபருக்கு 30,000/= ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், சிறப்பம்சமாக கலாசார, ஆன்மிக சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகையில் இருந்து காங்கேசன்துறையை அடைந்து, அங்கிருந்து சீதாவனம், சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வானம் , ராவணன் குகைகள், பழங்கால பிரசித்தி பெற்ற கோவில்கள், புராண இடங்கள் மற்றும் ராமர் பாலத்தை பார்வையிடும் வகையில் சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது..
ஜூன் மாதம் 1 முதல், 250 பேர் பயணிக்கும் வகையில், புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட கப்பல், மூன்று மணி நேரத்தில் நாகையில் இருந்தது காங்கேசன் துறையை சென்றடையும். ஜூலை 2-வது வாரத்தில் இருந்து, இலங்கைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தும் துவங்கவுள்ளதாக நாகை-இலங்கை தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.