தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கரவெட்டிக்கு குடிதண்ணீர் விநியோகம் ஆரம்பம்.!
[2025-05-20 11:52:55] Views:[63] வடமராட்சி கிழக்கு தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் நேற்றைய தினம் பரீட்சார்த்தமாக கரவெட்டிக்கு விநியோகிக்கப்பட்டது.
தாளையடி யிலிருந்து கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கிக்கு நீர் வழங்கும் செயற்பாடானது நேற்று காலை 8.30க்கு சமய நிகழ்வுடன் ஆரம்பானது.
குறித்த நிகழ்வில் பிராந்திய பொறியியலாளர் உதயசீலன், யாழ் மாவட்ட பொறுப்பதிகாரி யசோதரன், பருத்திதுறை நீர் வழங்கல் சபை பொறுப்பாளர் மதிவாணன், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் இராகவன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நீர் விநியோக செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர்.
நல்லாட்சி காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் யாழ்ப்பாணம் – தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலைய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
266 மில்லியன் டொலர் செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.