பதுளை நகரில் சகோதர மீது சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல்.!!
[2025-05-21 11:10:56] Views:[192] பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியான வாள் வீச்சு தாக்குதலில் முடிவடைந்தது.
குறித்த சம்பவம் நேற்று (20) மாலை பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது சகோதரர் ஒருவர் தனது தம்பி மீது சுமார் பத்து நிமிடங்கள் சரிமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடாத்தி படுகாயங்களுக்கு உட்படுத்தி இருந்தார்.
சம்பவத்தில் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுக்கு இலக்கான தம்பியார் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"நீ அருகில் வந்தால், உன்னை வெட்டுவேன்" என்று சந்தேக நபர் குறித்த சம்பவத்தில் காயமடைந்தவரை காப்பாற்ற முயன்றவர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் கத்திக் கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்கள் குறித்த நபரை நெருங்க பயந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்துக்கு வந்த பதுளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜென்ட் நிலாந்த என்று கூறிக்கொண்ட அதிகாரி ஒருவர் சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல பொதுமக்கள் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.