மனைவியை கொடூரமாக கொன்று தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு பொலிஸில் சரணடைந்த கணவன்!!!
[2025-06-03 15:44:42] Views:[208] புளியங்குளம், நொச்சிக்குளம் - அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நயினாமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார். ஆசிரியைக்கு வயது குறைந்த இளைஞன் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த விவகாரம் இருவருக்குள்ளும் தீர்க்கப்பட்டு, அண்மைய நாட்களில் சுமுகமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதை பார்த்து கொந்தளித்த கணவன், ஆசிரியையின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.
பின்னர், இன்று குறித்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
செல்லும் வழியில் நயினாமடு காட்டுப்பகுதியில் வைத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்ததுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான கணவன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் எனவும், சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.