ஆட்சி அமைக்க டக்ளஸை நாடும் தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி.!
[2025-06-05 11:36:24] Views:[98] உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சங்கு - சைக்கிள் கூட்டணி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “நண்பர் தர்மலிங்கம் சித்தார்த்தன் என்னை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தொடர்பாக கலந்துரையாடினார். அரசியல்வாதியாக இல்லாமல் நட்பு ரீதியாக அந்த சந்திப்பு நடைபெறும்.
உள்ளூராட்சி சபைகளை ஆளுவது தொடர்பாக அண்ணன் சி.வி.கே.சிவஞானமும் கடந்த 3 ஆம் திகதி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி சந்திப்பதற்கு கோரியிருந்தார். இருவரையும் சந்திக்க தீர்மானித்துள்ளேன்.
உத்தியோகபூர்வமாக எந்த கட்சிகளும் இதுவரை என்னோடு கதைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களிடம் தங்கள் ஆதரவை கோரியுள்ளனர்.
கடந்த கால கசப்புகளை கருத்திற்க்கொண்டு எதுவுமே உத்தியோகபூர்வமாக இருந்தாலே அது நல்லது என்பது என்னுடைய அனுபவம்” என தெரிவித்தார்.