"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம்" கவனயீர்ப்பு போராட்டம்.!
[2025-06-13 19:37:11] Views:[119] "எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம், புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்,
தெல்லிப்பளை வைத்திய நிர்வாகி தேவநேசனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக உடனடியாக விசாரணைக் குழுவை நியமிப்பதுடன், புற்றுநோயாளர்களுக்குரிய தரமான இலவச சிகிச்சை அளிப்பதில் செயற்கையாக இடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதுடன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இதர சுகாதார ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் சேவையாற்றுவதற்கும் ஏதுவான வகையில் நிர்வாக மாற்றத்தை வெகு விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இதன் போது கருத்து தெரிவித்த தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்;
இந்த மருத்துவமனையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் மருத்துவமனை ஆகும். வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற மருத்துவர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த மருத்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மகரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது.
தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.