யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவைக்கு அனுமதி;
[2025-06-17 21:54:06] Views:[109] கொழும்பு - யாழ்ப்பாணம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் David Peiris Airlines நிறுவனத்திற்கு நேற்று (16) வழங்கியுள்ளது.
அதற்கமைய கொழும்பில் உள்ள இரத்மலானை விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் நேரடி உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும் இதற்காக Cessna - 280 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விமானப் பயணத்திற்கு 01 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விமானப்பயணத்திற்கு இருவழி கட்டணமாக 68,000 ரூபா அறவிடப்படுவதுடன், ஏழு கிலோ கிராம் பொதி கொண்டு செல்ல பயணிகள் அனுமதிக்கப்படும். அதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான முனையம் கட்டப்பட்டு வருகிறதுடன், அதன் பணிகள் முடிந்ததும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது வடக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதுடன் வட மாகாணத்தில் சுற்றுலாவை அதிகரிப்பதுடன் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.