இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.!
[2025-06-21 11:45:31] Views:[110] ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் volker türk எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
அதன்படி, எதிர்வரும் ஜூன் 23 முதல் 26 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளி விவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது, ஆணையாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் ஆகியோரையும் அவர் சந்திப்பார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆணையாளர் கண்டிக்குச் சென்று அங்கு புனித பல் தாது ஆலயத்திற்கு மரியாதை செலுத்துவதோடு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதான பீடாதிபதிகளையும் சந்திப்பார்.
அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திப்பார்.
“இந்தப் பயணத்தின் போது மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து மேலும் முன்னேற்றம் காண்பது குறித்து கணிசமான விவாதங்கள் இடம்பெறும், இது மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கு ஏற்ப இருக்கும்” என்று வெளி விவகாரஅமைச்சகம் தெரிவித்துள்ளது.