பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் - 69ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
[2025-10-02 11:31:47] Views:[149] மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்வடைந்துள்ளது படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலநடுக்கத்தின் மையமானது லெய்டே பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வை உணர்ந்து மக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வீதிகளுக்கு ஓடியுள்ளனர்.
மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் சரிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தில் அங்குள்ள சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதில் மொத்தம் 69 பேர் உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் இறங்கி உள்ளனர்.
நிலநடுக்கம் பதிவான செபு நகரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நிலநடுக்க பீதியில் உறைந்துள்ள அவர்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்து உள்ளனர்.
நில நடுக்கத்தின் பின்னூட்டங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரியவருவதால், மக்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நகர நிலநடுக்கவியல் மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.