வடக்கு ஆளுநரின் மக்கள் குறைகேள் சந்திப்பு!
[2025-03-06 12:43:38] Views:[121] நேற்றையதினம் (05) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.
நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
நெடுந்தீவு துறைமுகம், கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர். வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல்படுவதாக மக்கள் தெரிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்,
வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்த வேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.