பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது!
[2025-03-10 10:46:30] Views:[146] கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருடன் கனேடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று (9) இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
20 வயது சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்க அதிகாரிகள் அவரது பொதிகளை சோதனை செய்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோ 573 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர், மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு, கனடாவின் டொராண்டோவிலிருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.