விமானப் பணிப்பெண்களுடன் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட புலம்பெயர் தமிழருக்கு பயணத்தடை!
[2025-03-13 10:38:49] Views:[93] ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணியான புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (12) காலை மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த குறித்த நபர் அதிக மதுபோதையில், சக பயணிகளிடம் மோசமாக நடந்துகொண்டதுடன், விமான பணிப்பெண்களிடமும் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய பொலிஸாருடன் சேர்ந்து குறித்த பயணியைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை தலா ரூ.100,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்த நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபருக்கு பயணத் தடையையும் விதித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நயினாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் 65 வயதான குறித்த சந்தேக நபர் இரட்டை குடியுரிமையுடையவர் என தெரியவந்துள்ளது.