க:பொ:த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்; கையடக்க தொலைபேசிகளுக்கு தடை!
[2025-03-17 15:33:55] Views:[87] 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பமான நிலையில், கையடக்க தொலைபேசிகளுடன் இணைக்கக்கூடிய அனைத்து உபகரணங்களும் பரீட்சை நிலையத்திற்குள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் 3,663 பரீட்சை நிலையங்களில் 4,74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 3,98,182 பரீட்சார்த்திகள் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும், 75,965 பரீட்சார்த்திகள் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து பரீட்சார்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரக்க சுமேதா வித்தியாலயத்தில் சிறைக்கைதிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேலை கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரம் உள்ளிட்ட கையடக்க தொலைபேசிகளுடன் இணைக்கக்கூடிய அனைத்து உபகரணங்களைப் பரீட்சை நிலையத்திற்குள் கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நேரம் தாழ்த்தி பரீட்சை நிலையத்திற்குச் செல்லும் நிலைமையினை கடந்த காலங்களில் காணமுடிந்ததாகவும், இந்த நிலைமையினை தவிர்த்து அனைத்து பரீட்சார்த்திகளும் உரிய நேரத்திற்குப் பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.